20.8.11
18.8.11
மகாகவி பாரதியார் கவிதைகள்
| 1. | செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே | (செந்தமிழ்) |
|
2. |
வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு | (செந்தமிழ்) |
|
3. |
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி-என மேவி யாறு பலவோடத்-திரு மேனி செழித்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
|
4. |
முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டு புவிமீதே-அவை யாவும் படைத்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
|
5. |
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
|
6. |
கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல பல்வித மாயின சாத்திரத்தின்-மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
|
7. |
வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி யாரம் படைத்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
|
8. |
சிங்களம் புட்பகம் சாவக-மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு. | (செந்தமிழ்) |
|
9. |
விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர் பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
|
10. |
சீன மிசிரம் யவனரகம்-இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக நன்று வளர்த்த தமிழ்நாடு. | (செந்தமிழ்) |
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது
கோவை செட்டிபாளையம்
மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது
கோவை செட்டிபாளையம்
மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது
நூலின் காலம் - 18-ஆம் நூற்றாண்டு
இரா. ந. கல்யாணசுந்தரம் ஏடு பெயர்த்து எழுதிய தேதி: 16 - ஆகஸ்டு - 1939
வையவிரி வலையுலா வைப்பு - நா. கணேசன், ஹூஸ்டன்
காப்பு
பின்முடுகு வெண்பா வல்லோர் புகழ்பேரூர் வாழ்பட்டி நாதன்மேற் சொல்லுங்கண் ணாடிவிடு தூதுக்கு - வெல்லுநட னம்பயில உம்பர்தொழு நம்பனரு ளும்பெரிய கம்பகும்பத் தும்பிமுகன் காப்புநூல்
சிவபெருமான் துதி| கார்போலும் மேனியனுங் கஞ்சமலர்ப் புங்கவனும் பார்கீண்டும் விண்பறந்தும் பன்னெடுநாள் - ஆர்வமுடன் தேடி வருந்தித் திரிந்துந் தெரியாமல் நீடுசுட ராவுயர நின்றருள்வோன் - பீடுடைய தக்கன் சிரத்தைத் தகர்த்துத் தகர்ச்சிரத்தை மிக்கத் திருத்தும் விறலாளன் - இக்குதனுக் காமாரி சூலதரன் காரிலகு கந்தரத்தன் தீமைப் புரத்தைச் சிரித்தெரித்த - கோமான் விடையன் நிருத்தமிடு மெய்யன் அலகைப் படையன் உமைக்குப் பதியான் - முடிவிலாச் சங்கரன்வெண் ணீற்றன் சதாசிவன்கங் காளனெரி தங்குங் கரத்தன் சபாபதியன் - கொங்கவிழும் கூவிளமார் கங்கைமதி கோளரவு தும்பைகொன்றைப் பூவறுகு சூடும் புரிசடையான் - காவியும்வெங் காலுஞ்செந் தாமரையும் கார்விடமுஞ் சாகரமும் வேலுங் கருவிளமும் மீனமும் - நீலவண்டும் மானுமம்பும் மாவடுவும் வாளுமொப்பற் றேயகன்று தானே யிரண்டுஞ் சரியாகி - வானுலகில் மண்ணுலகில் உற்பவித்து வாழும் உயிர்க்கெல்லாம் எண்ணில் அருளளித்தும் இன்புற்ற - கண்ணிணைசேர் | 10 |
பேதை மரகதமாம் பெண்ணைத்தன் மெய்யிலொரு பாதியிலே வைத்துகந்த பட்டீசன் - தீதணுகாப் பேரைநகர் வாழும் பெருமான்றன் மெய்யழகோர் காரணமாய் உன்னிடத்தே காணுதலுஞ் - சீரிலகு கண்ணாடியின் சிறப்பு சுந்தரங்கள் எல்லாம் தொகுப்பில் ஒருவடிவாய்ச் சுந்தரரைக் காட்டும் தொழிலாடி - அந்தரத்தில் அம்புவியில் உள்ளபொருள் அத்தனையு நீயாடிக் கம்பிதஞ்செய் வித்திடுவாய் கஞ்சனமே - கொம்பனையார் வித்துருமப் பொற்றரள மிக்கபணி பெற்றிடினு மத்தவளை யுற்றிருப்பா யத்தமே - முத்தநகை மானார் கபோல வளத்துவமை பார்க்கிலுனைத் தானே புகழுந் தருப்பணமே - மானேயார் நாட்டங்கம் நாற்றிசையும் நாடிலுமுன் னேயசைய மாட்டாமற் செய்தபடி மக்கலமே - நீட்டுபதி னாறுபசா ரஞ்சிவனுக்கு அன்பினொடு செய்யவதில் மாறிலா தேந்துமொளி வட்டமே - வீறுலகில் தன்னேரி லாதமன்னன் தானிருக்கும் ஆசனத்தின் முன்னே யிருக்கு முகுரமே - துன்னியிடும் பைந்தார் நகரிற் படுதிரவி யங்களினில் ஐந்தா மதில்முதற்கண் ணாடியே - முந்து | 20 |
நயமான லோகத்தில் நாடுவாய் நற்கல் நயமாகில் அங்கே நடிப்பாய் - இயல்பான அப்பு வழியே அருஞ்சரக்குக் கொண்டணைவார் கப்பல் நடத்தியிடு கண்மணியே - துப்புறுவார் ஆசையினால் வேதாந்த ஆகமநூல் பார்க்குமவர் நாசியிலே நின்றுணர்த்து நாயகமே - பேசரிய நண்ணுபொறி ஐந்தினையு நாடவறி யாதவென்றன் கண்ணிணைக்கும் கண்மணியாய்க் காட்டிடுவாய் - விண்ணுமண்ணும் எட்டுத் திசையோடு இருந்தவொரு பத்தினையும் கட்டுத் தவிர்த்திடுவாய் காணாதே - மட்டாரும் நூலணிந்த மெய்வலத்தை நொய்தினிட மாக்கியிடப் பாலைவலப் பாலிருத்தும் பக்குவனே - சால இரசமுடன் சேர்ந்திருப்ப தென்றறியார் உன்னை நிரசமென்று சொல்லுவது நேரோ - பரவசமாய்க் கண்ணாடி யுண்டதனங் கண்ணாடி நில்லாமற் கண்ணாடி யேன்விரும்புங் கண்ணாடி - திண்ணமதாய் மின்னார்க்கும் ஆடவர்க்கும் வேண்டுபொருள் வெவ்வேறே சொன்னாலும் உன்னையே சூழ்ந்துகொண்டு - முன்னிருத்திப் பம்பரத்தை வென்றதனப் பைந்தொடியா ருங்கடல்சூழ் அம்புவியைத் தாங்கும் அரசருமே - தம்பல்லைக் | 30 |
கெஞ்சிப் பணிந்திட்டுன் கீழ்ப்பட்டார் பாரிலுன்னை மிஞ்சினபேர் ஆருரையாய் மெல்லோனே - அஞ்சீர் அயனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை நிறையுஞ் சராசரங்கள் நீடும் தராதலத்தில் மறைநாலு வாயான மாண்பால் - நிலையாத கஞ்சனம்பேர் காட்டுகையாற் காதலித்தோர்க் கானதினாற் பஞ்சடிசேர் மானாரைப் பண்ணுறலாற் - கஞ்சமலர்த் தேவனே யென்று தெரியும் பெரியோரிப் பூவுலகில் உன்னையே போற்றிடுவார் - மேவிவரு அரிக்கும் கண்ணாடிக்கும் சிலேடை கஞ்சனங் கம்படலாற் கட்டுண் டமைந்ததினால் அஞ்சொலார் தன்கைவசம் ஆனதினால் - மிஞ்ச ஒருவடிவாய் நின்றமையால் உள்ளே தெரிய உருவெடுத்துக் காட்டுகையால் ஓதும் - பெருவானும் மேதினியும் எல்லாந்தன் மெய்யில் அடக்குகையால் ஆதிநா ராயணநீ யாமெனலாம் - கோதிலார் அரனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை பாகத் திருத்தலாற் பன்னீருந் தங்கினதாற் சோகத்தை யார்க்குந் துடைத்தலால் - மாகத்தைத் தந்துள்ளே காட்டுகையால் தக்கவருள் நாட்டுகையாற் சிந்துகே சம்முரித்துச் சேர்ந்தமையால் - முந்தவரும் அம்பலத்தில் ஆடியென்றும் ஆனதினால் பேரைநகர் நம்பனுக்கு நேரான நாயகமே - உம்பருக்கும் | 40 |
எட்டாமே மூவருக்கும் ஏமமாய் நின்றருளும் பட்டீசன் என்றுமனம் பாவிப்போன் - இட்டமுடன் ஆருறினுங் கைசேரு மத்தமே ரூபமதாய்ச் சேருவாய் கீழ்மேல் சிறப்பிலதாய்ப் - பாரிற் கணிகைமா தென்றுன்னைக் காணலாங் கண்ணே இணைபகரா வாழ்வே இனிதே - கணவருடன் ஊடுங் கனங்குழையார்க்கு உற்ற குணந்திருத்த ஆடவர்கை கூப்பி அடிபணிந்தால் - நாடாதே தோயார் கபோலத்தைத் தொட்டுமுத்தம் இட்டவுடன் வேயனைய தோளியர்கள் மேவுவது - மாயிலெல்லாம் ஆடியே யுன்றனெழி லாங்கபோ லங்கணினைக் கூடினதால் அன்றோ குணவானே - நாடியிடும் பெண்ணவர்கள் தங்குணமும் பெட்பும் பெருமையுநீ உண்ணயந்து கண்டிருப்பாய் உத்தமனே - கண்ணிணையாய் உன்னையே நட்புக்கு உறுதியென எண்ணியது முன்னமே வள்ளுவனார் மூதுரையிற் - சொன்ன நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பாம் - புவியிற் புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம் நட்பாங் கிழமை தருமாம் - நுணுக்கமாய்ச் | 50 |
சொன்ன முறையின் படிநின் தொடர்புளதாற் பின்னை ஒருவரையும் பேசுவனோ - கன்னியர்கள் அந்தக் கரணம் அவருரைக்கு முன்னேநீ சிந்தை தனிலுணர்ந்து தேர்ந்திடுவாய் - பந்தமெலாம் கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்று மாறாநீர் வையக் கணியென்றுங் - கூறாமுன் ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளலென்றும் - வையமெலாம் போற்றுதிரு வள்ளுவனார் பூவுலகோர்க் கேயினிதாய்ச் சாற்றுபொரு ளின்பயனீ தானாமே - ஏற்றரிய ஆடியே என்றன் அருமை நலங்களெலாங் கூடி யிருந்ததிந்தக் கொற்றவனே - மூடியென்னப் பேய்க்குரைத்தால் உண்மையினைப் பேசமனம் நாணினதால் தாய்க்கொழித்த சூலுமுண்டோ தாரணியில் - சேய்க்குப் பசிவருத்தங் கண்டிடின்நல் பாலருத்தித் தாய்தன் சிசுவைப் புரக்குஞ் செயல்போல் - நிசமாக |
14.8.11
10.8.11
கொங்கு நாட்டுப் புலவர்கள்
கொங்கு நாட்டுப் புலவர்கள் சங்க காலத்தில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர் அவர்களின் பெயர்கள்;- 1. அஞ்சி அத்தை மகள் நாகையார்-அதியமான் நெடுமான் அஞ்சியின் மனைவியார். தகடூர்-அகம்-352 2. அதியன் விண்ணத்தனார் –தகடூர் நாட்டினர் அகம்-301. 3.அந்தியிளங்கீரனார்-பவானி வட்டத்து அந்தியூர்.அகம்-71 4.ஆலத்தூர்க்கிழார்-இராசிபுர வட்டத்து ஆலத்தூர்.புறம்-34,36,69,225,324.குறுந்-112,350. 5.ஆவியார்-ஆவியர்குடியினர்;பழனி.புறம்-298. 6.இரும்பிடர்த்தலையார்-குளித்தலை வட்டத்துப் பிடர்தலை.புறம்-3 7.உலகடத்துக் கந்தரத்தனார்-அந்தியூரின் தென்கிழக்கில் உள்ள உலகடம்.அகம்-95,191.நற்-238,306.குறுந்-155. 8.எருமை வெளியனார்- எருமை நாட்டு[மைசூர் நாடு] எருமையூர்.புறம்-273,303.அகம்-73. 9.எருமை வெளியனார் மகனார் கடலனார்- எருமை வெளியனார் மைந்தர்.அகம்-72. 10.கருவூர் ஓதஞானியார்.குறுந்-71,227. 11.கருவூர் கண்ணம் பாளனார்.அகம்-180,263.நற்-159. 12. கருவூர் கண்ணம் புல்லனார்.அகம்-63.நற்-159. 13.கருவூர்க் கதப்பி கருவூர் கண்ணம் ள்ளை.புறம்-380.நற்-135.குறுந்-64,265,380. 14.கருவூர்க் கதப்பிள்ளைச்சாத்தானார்.புறம்-168.அகம்-309.நற்-343. 15. கருவூர்க் கலிங்கத்தனார் அகம்-183. 16. கருவூர்க்கிழார்.குறுந்-170. 17.கருவூர்க் கோசனார்.நற்-214. 18.கருவூர்ச்சேரமான் சாத்தனார்.குறுந்-268. 19. கருவூர் நன்மார்பனார்.அகம்-277. 20. கருவூர்ப் பவுத்திரனார்.குறுந்-162. 21. கருவூர்ப் பூதஞ்சாத்தனார்.அகம்-50. 22. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்.புறம்-219.10-22.இப் பதின்மூவரும் கொங்கு நாட்டுக் கரூர். 23.குடவாயிற் கீரத்தனார்-பல்லட வட்டத்துக் குட வாயில்.புறம்-242.அகம்-44,60,79,119,129,287,315,345,366,385.நற்-27,379.குறுந்-281,369. 24.குடவாயிற் கீரனக்கனார்-குடவாயில்.இவர் முன்னவர் மைந்தராக இருக்கலாம்.குறுந்-79. 25.குடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்-உடுமலை வட்டத்துக்குடிமங்கலம்.அகம்-179,232. 26.கொல்லிக் கண்ணனார்-கொல்லிமலை நாடு,குறுந்-34. 27.செங்குன்றூர்க்கிழார்-திருச்செங்கோடு.திருவள்ளுவ மாலை. 28.தகடூர் யாத்திரை ஆசிரியர் ஒருவர்.[பெயர் தெரியவில்லை] 29.பெந்தலைச் சாத்தனார்-பவானி வட்டத்துப் பெருந்தலையூர்.புறம்-151,164,165,205,294.அகம்-13,224.நற்-262. 30.பொன்முடியார்-தகடூர் நாட்டு பொன்முடி.பெண்புலவர்,புறம்-299,310,312. குறிப்பு;-7.உலகடம்-உரோடோகம்,ஒரோடோகம்,ஒரோடகம்,உரோடகம்,உரகடம் என,ஏடுகளிற் பலவாறாகப் பிறழ்ந்து காணப்படுகிறது. 28.குடவாயில்-இன்று,`கொடுவாய்’என வழங்குகிறது.கொடுவாய்க் கல்வெட்டில் [பி3360] `கொடுவாயில்’ என்றுள்ளது. இடிகரைக் கல்வெட்டில் ’குடவாயில்’ ஒன்றே உள்ளது. 25.இவ்வூர்-’கொடிமங்கலம்’ எனவும் திரிந்து காணப்படுகிறது.[அகம்-179] ஆனால்,வழக்கில் ’குடிமங்கலம்’ என்றே வழங்குகிறது. பெயர்களுக்குப் பின்னுள்ள பாட்டெண்கள், அவர்கள் பாடிய பாடல்களின் எண்களாகும். மேற்க்கோள் நூல்கள்;- கொங்கு நாடு-புலவர் குழந்தை .94 சிற்றிலக்கியப் புலவர் அகராதி
5.8.11
கண்ணுள் வினைஞர்
சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.
‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8
விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
4.8.11
சிந்து இலக்கியம்
1. பழனியாண்டவன் காவடிச் சிந்து
நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்
பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் 1
சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் 2
கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் 3
துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் 4
செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை 5
ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் 6
திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் 7
இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் 8
பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் 9
படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு 10
கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் 11
பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்
1.8.11
பழனி இரட்டைமணி மாலை
பழனி இரட்டைமணி மாலை
[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]
காப்பு
ஞான விரகறியா நானுஞ் சிலதமிழால்
வானவரேத் தும்பழனி வந்தானைத்-தானவரை
வென்றானை வாழ்த்த விரைப்பா திரிவனஞ்சேர்
கன்றானை மாமுகத்தோன் காப்பு.
நூல்
பூமாது கேள்வன் புகழ்மருகன் பொய்யாத
பாமாது வாழ்த்தும் பழனியான்-நாமத்
தனிவேலை யுந்தோகை தன்னையுமே பாட
இனிவேலை கண்டீ ரெமக்கு. [1]
எம்மைப் புரக்குஞ் சிவகிரி யானெம் மிரவொழிக்கும்
செம்மைத் தனிச்சுடர் தேவசிந் தூரந்தெய் வானைவள்ளி
யம்மைக் கிறைபொன் னடிகளல் லாம லடியவர்கள்
வெம்மைப் பிறவிப் பிணிக்கொரு மூலிகை வேறில்லையே. [2]
வேறோ விளக்கும் விளக்கொளியும் வேறிரண்டு
கூறோ நவரசமுங் கூத்தாட்டும் - நாறுமலர்க்
கள்ளுயிர்க்குந் தென்பழனிக் கந்தன் குருபரனென்
உள்ளுயிர்க்கு வேற்றுமையா மோ. [3]
ஆமோ திருவெழுத் தாற்றி யாததென் றஞ்சலிலா
நாமோவை காபுரி நாட்டிருப் போம்வினை நம்மைவிட்டுப்
போமோ கொடுவினை போய்விட வேண்டிற் புனக்குறத்தி
மாமோக வேலன் பழனியை வாழ்த்தென் மடநெஞ்சமே. [4]
நெஞ்ச முருகா நிதிப்பெருக்க ரோவெனக்கோர்
தஞ்ச முருகா தனிமுதல்வா-செஞ்சதங்கைத்
தாளுடையாய் தென்பழனிச் சண்முகா பன்னிரண்டு
தோளுடையாய் நீயே துணை. [5]
துணைக்குங் குமக்கொங்கை மங்கையுந் தானுந்த்ரி சூலனெடுத்
தணைக்குங் குழந்தை பழனிப் பிரான்விளை யாட்டென் சொல்கேன்
கணைக்குங் கடுங்கதிர்ச் செவ்வேல்விட் டேழு கடல்கலக்கும்
பணைக்குந் திசைக்களி றோரெட்டு மேவிடும் பாய்ச்சலுக்கே. [6]
பாயிருள்போற் சூர்மாப் பயந்தோடப் பானுவெனத்
தீயுமிழுங் கூரிலைவேற் செவ்வேளே-கோயிலுனக்
கேரகமோ வெங்கணுமோ வென்னெஞ்ச மோதிருச்செந்
தூரகமோ தென்பழனி யோ. [7]
ஓங்கார மான முருகோன் மருங்கி லொருகைவைத்து
நீங்கா தொருகை பிடித்ததண் டாயுத நெஞ்சைவிட்டு
வாங்கா திவனைப் பழனிவெற் பேறி வணங்கினர்க்குத்
தீங்கா னதுவரு மோபொரு மோநமன் சேனைகளே. [8]
சேனைத் திரளுநெடுஞ் செங்கோலு மங்கையரும்
ஏனைத் திருவு மௌிதன்றோ-நானிலத்து
நம்பிடுவார்க் கும்பழனி நாட்டுக் குருபரனைக்
கும்பிடுவார் தம்மடியார்க் கும். [9]
அடியார்க் கௌிய பழனிப் பிரானுல கன்றளந்த
நெடியார்க்கு மார்க்கு நினைப்பரி யான்பக்க நின்றதெய்வப்
பிடியார்க் கிறைவன் பெயர்சொன்ன பேரைப் பிடிக்கிலன்னக்
கொடியார்க்குப் பூட்டுந் தளைபூட்டு வன்கொடுங் கூற்றிற்குமே. [10]
கூற்றையோ திங்கட் கொழுந்தென்றீர் கூற்றுயிர்த்த
காற்றையோ தென்றலிளங் கன்றென்றீர்-தேற்றக்
கடவீ ரெனிற்பழனிக் கந்தவேண் முன்போய்
மடவீர் மொழிவீரென் மால். [11]
மாலையுஞ் சாந்தும் புழுகோ டளைந்தபொன் மார்பையுமுந்
நூலையுந் தென்பழ னிப்பெரு மானன்பர் நோய்தணிக்கும்
வேலையும் பச்சை மயில்வாக னத்தையும் வெற்றித்தண்டைக்
காலையுஞ் சென்று தொழவேண்டு மாலையுங் காலையுமே. [12]
காலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட
மாலைக் குமுதமெலாம் வாய்மலர-நூலிடையார்
கூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச்
சேந்தனிடத் தன்றோ செகம். [13]
செகத்தா ரொருவர் திருவாவி னன்குடிச் செல்வன்றன்னை
அகத்தா மரைவைத்துப் பூசைசெய் தாரகத் தாமரைக்கே
நகத்தா மரையிரண் டுள்ளே நடிக்கு நடம்புரிவான்
முகத்தா மரைகளிற் பன்னிரு தாமரை முன்னிற்குமே. [14]
முன்னிற்குந் தென்பழனி முத்துக் குமாரநீ
மன்னிக்கு மன்னருட்கோர் மட்டுண்டோ-உன்னமகிழ்
பார்ப்பானை லோகம் படையென்றாய் மூவடிமண்
ஏற்பானைக் காவென்றா யே. [15]
ஏட்டுக் கணக்கு மெழுத்தாணி தேய்ந்தது மியாங்கள்விற்ற
பாட்டுக் கணக்கும் பலன்பெற லாமென்று பாடிச்சென்ற
வீட்டுக் கணக்குந் தொகைபார்க்கிற் கார்க்கடல் வெண்மணலைக்
கூட்டிக் கணக்கிட லாமே பழனிக் குருபரனே. [16]
குருமூர்த்தி யாய்க்குடிலை கூறியிட்ட வுன்னை
ஒருமூர்த்தி யென்னா துலகம்-இருமூர்த்தி
மும்மூர்த்தி யாய்ப்பழனி மூர்த்தியே கீர்த்திபுனை
எம்மூர்த் தியுமான தென். [17]
என்னையும் பார்க்கச் சிறியோர் பிறப்பு மிறப்புமிலா
உன்னையுந் தெய்வமென் றோதிய நாவி னுலப்பவரைப்
பின்னையுந் தெய்வங்க ளென்பார் பழனிப் பிரான்குமரா
பொன்னையும் பொன்னென் றுரைப்பா ரிரும்பையும் பொன்னென்பரே. [18]
பொற்கன்னி காரவனம் பூங்கற் பகவனமாச்
சொற்க நிகர்பழனித் தூயோனே-நற்கனியைத்
தந்தா வளமுகத்தான் றந்தருள வந்தருள்வாய்
நந்தா வளமெனக்கு நல்கு. [19]
நல்லார்முன் னெங்ஙன முய்யவல் லேன்பழ நான்மறையும்
வல்லாய் பழனி மலைவள்ள லேயிரு மங்கையர்க்கும்
சல்லாப லீலைத் தலைவாவென் னோயைத் தணிக்கும்வண்ணம்
பொல்லா வினைவற்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே. [20]
31.7.11
குடிமங்கலம்.வாதுளி நற்சேந்தனார்
| | விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன் வெண்தேர் ஓடுங் கடங்காய் மருங்கில் துனையெரி பரந்த துன்னரும் வியன்காட்டுச் சிறுகண் யானை நெடுங்கை நீட்டி |
| 5. | 1வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது கான்புலந்து கழியுங் கண்ணகன் பரப்பின் விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர் நல்நிலை பொறித்த கல்நிலை அதர 2அரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச் |
| 10. | சுரஞ்செல விரும்பினி ராயின் இன்நகை முருந்தெனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்க் குவளை நாள்மலர் புரையும் உண்கண்இம் மதியேர் 3வாள்நுதல் புலம்பப் பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே. |
| | - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார். |
| மறவரது நல்நிலை பொறித்தகல்நிலை அதர - நல்ல வெற்றி நிலையை எழுதியநடுகற்கள் நிலைகொண்ட வழிகளையுடையவாய,அரம்புகொள் பூசல் களையுநர் காணாச் சுரம்செலவிரும்பினிர் ஆயின் - குறும்பர்கள் செய்யும் பூசலைநீக்குநரைக் காணாத சுரநெறியைக் கடந்து செல்லவிரும்பினீர் ஆயின்; 10-4. இன் நகைமுருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர் வாய் -இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்டமுட்போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும்,குவளை நாள் மலர் புரையும் உண்கண் - குவளையின் புதியமலரை யொக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய, இமதிஏர் வாள் நுதல் புலம்ப - இந்த மதியினை யொத்தஒளி பொருந்திய நெற்றியினையுடையாள்வருந்த, பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ - இப்பதியைநீங்கிப்போய்த் தங்குதல் உமக்குப்பொருந்துவதாமோ? (முடிபு) தலைவ!சுரம்செல விரும்பினிராயின், வாள்நுதல் புலம்பப்பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ? வெண்தேர் ஓடும்வியன் காட்டில், யானை, கை நீட்டியும் வாய்திறந்தும் புனல் பெறாது புலந்து கழிவதும்கொடுவில்லாடவர் நடுகல் நிலைபெற்றஅதர்களையுடையதும் அரம்புகொள் பூசல் களையுநர்இல்லாததும் ஆகிய சுரம் என்க. (வி - ரை.) கொடுவில் ஆடவர், கரந்தை மறவர் என்க, அரம்பு -குறும்பர், காட்டுத் தலைவர், ‘இன்னகை...வாணுதல்புலம்ப’ என்றது, தலைவியின் இனிய நகையும் கூரியபல்லும்துவர் வாயும் உண்கண்ணும் வாணுதலும் ஆய இவை,நும்முன் தோன்றி நும்மை அழுங்குவிப்பன வாகலின்,நீர் பிரிந்துறைதல் ஒல்லாதென்றாள் என்றபடி. |
| | காணினி வாழி தோழி பானாள் மழைமுழங்கு அரவங் கேட்ட கழைதின் மாஅல் யானை புலிசெத்து வெழீஇ இருங்கல் விடரகஞ் சிலம்பப் பெயரும் |
| 5. | பெருங்கல் நாடன் கேண்மை இனியே குன்ற வேலிச் சிறுகுடி யாங்கண் மன்ற வேங்கை மணநாள் பூத்த மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய் வியலறை வரிக்கும் முன்றில் குறவர் |
| 10. | மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் ஆர்கலி விழவுக்களங் கடுப்ப நாளும் விரவுப்பூம் பலியொடு விரைஇ அன்னை கடியுடை வியனகர்க் காவல் கண்ணி முருகென வேலன் தரூஉம் |
| 15. | பருவ மாகப் பயந்தன்றால் நமக்கே. |
| | -கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார். |
அகநானூறு உரை ஆசிரியர்: புலியூர்க்கேசிகன்
தமிழக வரலாறு: ஆசிரியர்: புலவர் குழந்தை ……by..sathasivam
30.7.11
புலவர் குழுந்தை!
இவருடைய காலத்தில் இப்போதிருப்பது போன்று பள்ளிகள் கிடையாது. திண்ணைப் பள்ளி என்றுதான் உண்டு. பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப்பயிற்சி செய்வார்கள். அதுபோன்ற பள்ளியில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார்குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திற னைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவரு டைய பொழுது போக்கே பாட்டெழுதுவதுதான். 1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற் ற புலவர்குழந்தை ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி னார். 37 ஆண்டுகள் பணிபுரிந்தார் பவானி நகரில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பிலும் இருந்துஓய்வுபெற்றார். 1926 லேயே இவர் எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரதஉற்சவச்சிந்து வீரகுமாரசாமி காவடிச்சிந்து வெள்ளகோவில் வழிநடைச்சிந்து ஆகியவை அச்சாயின. 2 தந்தை பெரியாரின் மீது அளவுகடந்த பக்தியும் மரியாதையும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. பெரியார் அவர்கள் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அறிஞர்குழு ஒன்றி னை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர்குழந்தை. பெரியார்கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரைஎழுதினார்.இந்த உரை யுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது. புலவர்குழந்தை முததம்மை என்னும் நங்கை நல்லாளைக் கரம் பிடித்தார். சமத்துவம் சமரசம் என்னும் இருபெண்மகவுகளை பெற்றார். சமத்துவம் என்பவர் கோவையில் பெருமைமிகுவிவசாயக் கல்லூரியில் இள.அறி.(வேளா) பட்டம் பெற்றார்.அந்தக் கல்லூரி யிலேயே பணிபுரிந்து ஓய்வுபெற்றார். சமரசம் என்பவர் இரண்டாவது பெண் பி.ஏ.பி.எல். படித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு பவானியில் உள்ளார். குழந்தையவர்கள் எழுதிய இராவண காவியம் அறியாதவர் இருக்க இயலாது. இராவணனுக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் தந்த நூல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குநிகரான பாடல்களை இடம் பெற செய்திருப்பது பெருமைக்குரியது. இந்த அரிய நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின்தடை நிக்கப்பட்டது. 3 பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்க லக்காரிகை கற்று கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து அதை முற்றிலும் எளிமையாக்கி யாப்பதிகாரம் என்ற நூலை வெளியிட் டார் இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார். அதைப்போலவே தொல்காப்பியத்தின் பொருள்திகாரம் முழுமைக்கும் எளிய உரை எழுதி அனைவரையும் கற்கும்படி எளிதாக்கினார். பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இன்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து தொடையதிகாரம் என்ற நூலும் வெளிவந்தது. கொங்குநாட்டின் மீது இஙகுவளர்ந்த தமிழ் புரவலர் மீதும் பற்றுகொண்ட குழந்தையவர்கள் கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறுகளைத் தொகுத்து கொங்குநாடும் தமிழும் கொங் குகுலமணிகள் கொங்குநாடு ஆகிய வரலாற்று நூல்களையும் வெ ளியிட்டார். தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைப் பண்புநலன் களை ஆராய்ந்து தொல்காப்பியர் காலத்தமிழர் என்ற நூலையும் எழுதினார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம் முப்பத்திநான்கு அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரி சையில் 3 இலக்கணப் பாங்கில் 3 உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன. செய்யுள் நூல்கள்- 1.இராவணகாவியம், 2 அரசியலரங்கம்,3 காமஞ்சரி 4 நெருஞசிப்பழம் 5 உலகப் பெரியோன் கென்னடி 6 திருநணா சிலேடை வெண்பா 7 புலவர்குழந்தைப் பாடல்கள் 8 கன்னியம்மன் சிந்து 9 ஆடி வேட்டை 10 நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, 11 வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரதஉற்ச வச்சிந்து 12வீரகுமாரசாமி காவடிச்சிந்து 13 வெள்ளகோவில் வழிநடைச்சிந்து உரை நூல்கள் 1. திருக்குறள் குழந்தையுரை 2 தொல்காப்பியபொருள்திகாரம் குழந்தையுரை 3 நீதிக்களஞசியம். இலக்கணம் 1. யாப்பதிகாரம் 2 தொடையதிகாரம் 3 இன்னூல் உரை நடை நூல்கள் 1. தொல்காப்பியர் காலத்தமிழர் 2 திருக்குறளும் பரிமேலழகரும் 3புவாமுல்லை 4 கொங்குநாடு 5 தமிழக வரலாறு 6 தமிழ்வாழ்க 7 தீரன் சின்னமலை 8 கொங்குநாடும் தமிழும் 9 கொங்குகுலம ணிகள் 10 அருந்தமிழ்விருந்து 11 அருந்தமிழ்அமிழ்து 12 சங்கத் தமிழ்ச் செல்வம் 13 ஒன்றேகுலம் 14 அண்ணல் காந்தி 15 தமிழ் எழுத்து சீர்திருத்தம் இவ்வளவு நூல்களையும் எழுதிய குழந்தையவர்கள் வேளாண் என்ற மாத இதழை1946 முதல் 1958வரை நடத்தினார் இத்தகு பெருமை பெற்று புலவர்குழந்தை தமிழுக்காக தம்மை எழுத்தில் ஈடுபடுத்தியது போலவே பேச்சிலும் வல்லவர் இத்தகுபெருமை பெற்ற புலவர்குழந்தை 1975 ம் ஆண்டு அவரது உடல் நம்மிடமிருந்து நீங்கினாலும் அவரது எழுத்துக் களால் இன்றும் நம்மிடையே அவர் உள்ளார் Courtesy: Pathivugal |
கோயம்புத்தூர் வரலாறு
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. காட்டுவாசிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927
உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[சான்று தேவை]இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக வந்தேறிகள் குடிபெயர்ந்தனர்.1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.-\\\கோயம்புத்தூர்__பெயர்க்காரணம்
இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. காட்டுவாசிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927 உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[சான்று தேவை]இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக வந்தேறிகள் குடிபெயர்ந்தனர்.1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
TamilBooks.vcv.co
ராஜராஜசோழன்
- ஸ்வஸ்திஸரீதிருமகள் போலப் பெருநிலச் செல்வியும்தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்காந்தளூர்ச் சாலை கலமருத் தருளிவேங்கை நாடும் கங்க பாடியும்நுளம்ப பாடியும் கடிகை பாடியும் - - - - - - - - -5குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்இரட்ட பாடி ஏழரை இலக்கமும்முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்-10எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்தொழுதகை விளங்கும் யாண்டேசெழியரைத் தேசுகொள் ஸரீகோஇராச கேசரிவன்மரான ஸரீஇராசராச தேவர்க்கு யாண்டு...
ராஜராஜசோழன்கல்வெட்டுகள்
குளித்தலை அருகே ராஜராஜசோழன் கோவில்: வரலாற்று கல்வெட்டுகள் கண்டெடுப்பு
Date: Oct 07 2010, Thursday
கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் சேரர் அகழ்வைப்பக காப்பாட்சியர் நாக கணேசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காப்பாட்சியர் நாக கணேசன் வெளியிட்ட அறிக்கை: ஆயிரம் ஆண்டு கடந்த மேட்டு மருதூர் சிவன் கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், கருங்களால் ஆன ஜகதி, பட்டி, குமுதவரி, கால் பிரஸ்தரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மட்டும் செங்கற்களால் அமைந்துள்ளது. கருவறையின் மூன்று பக்கமும் 22 தூண்களும், பிரஸ்தரத்தில் பூதகணங்கள் வரிசையாக அணிவகுப்பது போலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணின் மேலும் மனிதமுகம் குடைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கட்டுமானம், சுதை உருவம் சிதைந்துவிட்டதால் அவற்றின் விபரம் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் உள்ளது. கருவறை வெளிப்பக்கத்தில் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகிறது. கருவறைக்குள் பெரிய அளவில் ஆவுடையாரும், லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 10 தூண் கொண்ட அர்த்தமண்டபத்திலும், பல்வேறு சிற்ப வேலைப்பாடு உள்ளன. கோவில் முன் நந்தி, சேஷ்டாத்தேவி, விநாயகர் சிற்பம் காணப்படுகின்றது. நுழைவாயிலில் தென்புற நிலைக்காலில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு 21 வரிகளில் உள்ளது. அரசனின் 11வது ஆட்சிக்காலம் மூலம் இவ்வூர், கோவில் இறைவன், மன்னனை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில், "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என முதலாம் ராஜராஜனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கி.பி.996ல் கோவில் கட்டப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. கேரளாவிலுள்ள விழிஞம் கோட்டை, காந்தளூர்சாலை ஆகியவற்றை வெற்றிகொண்டதை நினைவு கூறும் வகையில், "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என்ற அடைமொழியுடன் மன்னன் குறிப்பிடப்பட்டார் என்பது தெரியவருகிறது.மேட்டு மருதூர், "மாதான மருதூர்' என்றும், இங்குள் ஈஸ்வரன் "ஆராவமிதீஸ்வரர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ பேரரசில் "மீய் கோட்டு' நாட்டில் அமைந்த சிற்றூராக மேட்டுமருதூர் இருந்துள்ளது. முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிய சிவன் கோவில் தற்போது முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்: ஆறா அமூதீஸ்வரர் சிவன்கோவில் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பழமையான கோவிலாக உள்ளதை அறிந்த, கரூர் முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டார். இங்குள்ள பழமையான சிற்பங்களை பாதுகாக்கவும், கோவிலை புதுப்பிக்கவும், நகர புணர் அமைப்பு நிதியின் கீழ் 22 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்தார். நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
