5.8.11

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

1. அரசியல் அறம்

1.1 கெட்டதை விடுங்கள்

    சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
    செய்யுறதைச் செஞ்சுடுங்க
    நல்லதுன்னா கேட்டுக்குங்க
    கெட்டதுன்னா விட்டுடுங்க

    முன்னாலே வந்தவங்க
    என்னென்னமோ சொன்னாங்க
    மூளையிலே ஏறுமுன்னு
    முயற்சியும் செஞ்சாங்க

    ஒண்ணுமே நடக்காம
    உள்ளம் நொந்து செத்தாங்க
    என்னாலும் ஆகாதுன்னு
    எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

    முடியிருந்தும் மொட்டைகளாய்
    மூச்சிருந்தும் கட்டைகளாய்
    விழியிருந்தும் பொட்டைகளாய்
    விழுந்துகிடக்கப் போறீங்களா?

    முறையைத் தெரிஞ்சு நடந்து
    பழைய நினைப்பை மறந்து
    உலகம் போற பாதையிலே
    உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

    சித்தர்களும் யோகிகளும்
    சிந்தனையில் ஞானிகளும்
    புத்தரோடு ஏசுவும்
    உத்தமர் காந்தியும்

    எத்தனையோ உண்மைகளை
    எழுதிஎழுதி வச்சாங்க
    எல்லாந்தான் படிச்சீங்க?
    என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

    [பாண்டித் தேவன்,1959]