சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.
‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8
விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
அரசர்களின் மனையை - அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்' என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் என்ற வரலாற்று உண்மையைப் பாண்டிய மன்னர்களின் முத்துபடு துறைமுகமாக இருந்த கொற்கை மூதூரின் வரலாற்றுடன் இணைத்து ஆராய்ந்தால்தான் தமிழக வரலாற்றின் தொடக்கப்பகுதி துலக்கமுறும். அத்தகைய ஆய்வில் தொல்லியல் அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து ஈடுபடவேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.
....