31.7.11

குடிமங்கலம்.வாதுளி நற்சேந்தனார்


179. பாலை
[பிரிவுணர்த்தியதலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.]

விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
வெண்தேர் ஓடுங் கடங்காய் மருங்கில்
துனையெரி பரந்த துன்னரும் வியன்காட்டுச்
சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
5.
1வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது
கான்புலந்து கழியுங் கண்ணகன் பரப்பின்
விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்நிலை அதர
2அரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச்
10.
சுரஞ்செல விரும்பினி ராயின் இன்நகை
முருந்தெனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்க்
குவளை நாள்மலர் புரையும் உண்கண்இம்
மதியேர் 3வாள்நுதல் புலம்பப்
பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே.

- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்.
(சொ - ள்.) 1-10. தலைவ-, விண்தோய் சிமைய விறல் வரைக் கவான்- வானை அளாவிய உச்சியினையுடைய பெருமை தங்கியமலையினது பக்கமலைக்கண்ணே, வெண்தேர் ஓடும் காய்கடமருங்கில் - பேய்த் தேர் ஓடாநிற்கும் காய்ந்தகற்காட்டின் பக்கத்தே, துனை எரி பரந்த துன்அரும்வியன் காட்டுச் சிறுகண் யானை - விரைந்தநெருப்புப் பரவிய கிட்டுதற்கரிய பெரியகாட்டிலுள்ள சிறிய கண்ணினையுடைய யானை, நெடு கைநீட்டி வான் வாய் திறந்தும் - அப்பேய்த்தேரின்பால் தன் நெடிய கையினை நீட்டியும்பெரிய வாயினைத் திறந்தும் - வண்புனல் பெறாஅதுகான் புலந்து கழியும்கண் அகன் பரப்பின் - வளவியநீரினைப் பெறாமல் காட்டைவெறுத்துக்கழிந்துபோம் இடம் அகன்ற பாலைநிலத்தின்கண்,விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர் - விடுதல்வாய்ந்த சிவந்த அம்பினையுடைய வளைந்தவில்லைக்கொண்ட

மறவரது நல்நிலை பொறித்தகல்நிலை அதர - நல்ல வெற்றி நிலையை எழுதியநடுகற்கள் நிலைகொண்ட வழிகளையுடையவாய,அரம்புகொள் பூசல் களையுநர் காணாச் சுரம்செலவிரும்பினிர் ஆயின் - குறும்பர்கள் செய்யும் பூசலைநீக்குநரைக் காணாத சுரநெறியைக் கடந்து செல்லவிரும்பினீர் ஆயின்;
10-4. இன் நகைமுருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர் வாய் -இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்டமுட்போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும்,குவளை நாள் மலர் புரையும் உண்கண் - குவளையின் புதியமலரை யொக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய, இமதிஏர் வாள் நுதல் புலம்ப - இந்த மதியினை யொத்தஒளி பொருந்திய நெற்றியினையுடையாள்வருந்த, பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ - இப்பதியைநீங்கிப்போய்த் தங்குதல் உமக்குப்பொருந்துவதாமோ?
(முடிபு) தலைவ!சுரம்செல விரும்பினிராயின், வாள்நுதல் புலம்பப்பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ?
வெண்தேர் ஓடும்வியன் காட்டில், யானை, கை நீட்டியும் வாய்திறந்தும் புனல் பெறாது புலந்து கழிவதும்கொடுவில்லாடவர் நடுகல் நிலைபெற்றஅதர்களையுடையதும் அரம்புகொள் பூசல் களையுநர்இல்லாததும் ஆகிய சுரம் என்க.
(வி - ரை.) கொடுவில் ஆடவர், கரந்தை மறவர் என்க, அரம்பு -குறும்பர், காட்டுத் தலைவர், ‘இன்னகை...வாணுதல்புலம்பஎன்றது, தலைவியின் இனிய நகையும் கூரியபல்லும்துவர் வாயும் உண்கண்ணும் வாணுதலும் ஆய இவை,நும்முன் தோன்றி நும்மை அழுங்குவிப்பன வாகலின்,நீர் பிரிந்துறைதல் ஒல்லாதென்றாள் என்றபடி.

232. குறிஞ்சி
[தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

காணினி வாழி தோழி பானாள்
மழைமுழங்கு அரவங் கேட்ட கழைதின்
மாஅல் யானை புலிசெத்து வெழீஇ
இருங்கல் விடரகஞ் சிலம்பப் பெயரும்
5.
பெருங்கல் நாடன் கேண்மை இனியே
குன்ற வேலிச் சிறுகுடி யாங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை வரிக்கும் முன்றில் குறவர்
10.
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கலி விழவுக்களங் கடுப்ப நாளும்
விரவுப்பூம் பலியொடு விரைஇ அன்னை
கடியுடை வியனகர்க் காவல் கண்ணி
முருகென வேலன் தரூஉம்
15.
பருவ மாகப் பயந்தன்றால் நமக்கே.

-கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்.
(சொ - ள்.) 1. தோழி-, வாழி-, இனி காண்- இப்பொழுது யான் கூறுவதனை உணர்வாயாக; 1-5. பால் நாள்-நடு இரவில், மழை முழங்கு அரவம் கேட்ட-மேகம் முழங்கும் இடியொலியினைக் கேட்ட, கழைதின் மாஅல் யானை-மூங்கிலைத் தின்னும் பெரிய யானையானது, புலி செத்து வெரீஇ-அவ்வொலியினைப் புலியின் ஒலி எனக் கருதி அஞ்சி, இரு கல் விடர் அகம் சிலம்ப பெயரும்-பெரிய மலையின் முழைஞ்சிடம் எதிரொலி செய்யக் கதறிப் பெயர்ந்தோடும், பெரு கல் நாடன் கேண்மை-பெரிய மலை பொருந்திய நாட்டினையுடைய தலைவனது நட்பு ;
5-11. இனி - இக்காலத்து, குன்றவேலி சிறு குடி ஆங்கண்-குன்றங்களாய வேலியினையுடைய சீறூரிடத்தே, மன்ற வேங்கைமணம் நாள் பூத்த - மன்றத்தின்கண்ணுள்ள வேங்கை மரங்கள் மணநாளாகிய காலத்தே பூத்த, மணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய் - மணியை யொத்த அரும்பு மலர்ந்த பொன்போன்ற பூக்கள் பரந்து, வியல் அறை வரிக்கும் முன்றில் - அகன்ற பாறைகளை அழகுறுத்தும் முற்றத்திலே, குறவர் - குறவர்கள், மனை - மனைக்கண்ணுள்ள, முதிர் மகளிரொடு குரவை தூங்கும் -ஆடுதல் வல்ல மகளிரொடு குரவை ஆடும், ஆர்கலி விழவுக் களம் கடுப்ப - ஆரவாரமிக்க விழாக்களத்தை யொப்ப;
11-15. அன்னை-, நாளும்-நாடொறும், விரவு பூ பலியொடு விரைஇ - விரவிய பலவகைப் பூக்களாய பலியொடு பொருந்தி, கடி உடை வியன் நகர் காவல்கண்-காவல் பொருந்திய அகன்ற மலையின் கண் காத்தலைக் கருதி, முருகு என-நமது வேறுபாடு முருகனால் உண்டாய தென்று, வேலன் தரூஉம்-வேலனை அழைக்கும், பருவம் ஆக நமக்கு பயந்தன்று-காலமாக நமக்கு விளைந்தது.
(முடிபு) தோழி! வாழி! காண்; நாடன் கேண்மை, இனி அன்னை முருகென (எண்ணி) காவல் கண்ணி, பலியொடு விரைஇ, வேலனைத் தரூஉம் பருவமாக நமக்குப் பயந்தன்று.
சிறுகுடியாங்கண் வேங்கையின் பொன்வீ தாஅய் அறைவரிக்கும் முன்றிலில் குறவர் மகளிரொடு குரவை தூங்கும் களங்கடுப்பப் பூம் பலியொடு விரைஇ என்க.
(வி - ரை.) மணி - முத்து, முத்துக்களில் பொன்மை செம்மை யுடையவும் உளவென்பது, 1'சந்திர குருவே அங்கா ரகனென, வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்என்பதனாற் பெற்றாம். அரும்புடன் வீ தாஅய் என்றலுமாம். காவல் கண்ணி என்பதற்கு, நம்மை இற்செறித்தலைக் கருதி என்றும், நமக்குத் தீங்குண்டாகாமல் முருகன் காத்தலைக் கருதி யென்றும், இருவகையாகக் கோடலும் பொருந்தும். விழவுக் களம் கடுப்ப என்னும் உவமையால், வேலன் வெறியாடுமிடத்திற்கு மலர் சிதறிக்கிடத்தலுடன் குரவை ஆடுதல் கோடலுமாம்.
கொங்குநாடு : ஆசிரியர்: புலவர் குழந்தை
அகநானூறு உரை ஆசிரியர்: புலியூர்க்கேசிகன்
தமிழக வரலாறு: ஆசிரியர்: புலவர் குழந்தை ……by..sathasivam